அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம். ஐ.நா அறிக்கை : தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA) தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் கடுமையான கவலைகளை வெளியிட்டுள்ளது.

அத்துடன் அச்சட்டமூலத்திலுள்ள பல சரத்துக்கள் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களுக்கு வழிவகுப்பதுடன், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

2026 செப்ரெம்பர் 22 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் குறித்து, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 19 பக்கங்களைக் கொண்ட விரிவான சட்டரீதியான மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முந்தைய வரைவுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய புதிய சட்டமூலத்தில் சில சாதகமான சீர்திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வரவேற்றுள்ள போதிலும், தற்போது நடைமுறையிலுள்ள கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் அதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு வரைவுகளிலும் காணப்பட்ட பல குறைபாடுகளை இந்த புதிய சட்டமூலம் மீண்டும் கொண்டிருப்பதுடன் சில இடங்களில் அவற்றை மேலும் விரிவாக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வரையறைகள் மிகவும் பரந்ததாகவும் துல்லியமற்றதாகவும் காணப்படுவதனால், அவை சட்டபூர்வமான கருத்து வெளிப்பாடுகள் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்தளவிலான கைது மற்றும் தேடுதல் அதிகாரங்கள், நீதித்துறை மேற்பார்வையற்ற தன்னிச்சையான நிர்வாகத் தடுத்துவைப்பு உத்தரவுகள் போன்றன மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு இரண்டு மாதங்கள் வரை தன்னிச்சையான தடுத்துவைப்பு உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது அதிகபட்சமாக ஓராண்டு வரை நீடிக்கப்பட முடியும் என்பதும், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இராணுவத்திற்கும் கடலோரக் காவல்படைக்கும் எந்த வித உடனடி நீதித்துறை கண்காணிப்புமற்று விரிவான சட்ட அமுலாக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதும் கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமூலத்தின் கீழ் காவல்துறையினரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்பது நீக்கப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கான சில மேலதிகப் பாதுகாப்புகள், காவல்துறை விசாரணைகளை ஒலி-ஒளிப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்கள் பற்றிய விபரங்களை 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என்ற விதந்துரைகள் போன்ற சாதகமான முன்னேற்றங்களை ஐ.நா வரவேற்றுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மேம்பாடுகள் புதிய சட்டமூலத்தினால் ஏற்படக்கூடிய பரந்தளவிலான மனித உரிமை அபாயங்களை முழுமையாகத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என ஐ.நா குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தற்போதைய சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னரும், நிலுவையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட (PTA) வழக்குகளையும் சில விதிகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் இடைக்கால ஏற்பாடுகள் குறித்தும் ஐ.நா எச்சரித்துள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க புதிய சட்டமூலத்தை முழுமையாக மறுவரைவு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதம் என்ற வரையறையானது திட்டமிட்ட வன்முறைச் செயல்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்த அதிகார அமைப்பு எதுவாக இருந்தாலும் 24 மணித்தியாலங்களுக்குள் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபட வேண்டும் என்றும், சித்திரவதைகள் மற்றும் கட்டாயக் காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிரான வலுவான பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய பாதுகாப்பைப் பேணுகின்ற அதேவேளையில் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் வகையிலானதொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு அநுர அரசாங்கத்துக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழரசு்க் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இந்த ஐநா அறிக்கையை முழுமையாக வரவேற்றுள்ளதுடன், அரசாங்கத்தின் இந்த புதிய சட்டமூல முயற்சிகளுக்கு எதிராகத் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

கடந்த காலங்களில் தமிழ்ச் சமூகமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெயர்களை மாற்றுவதால் மட்டும் சட்டத்தின் கொடூரத்தன்மை மாறிவிடாது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்க் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர் சங்கங்களுடன் இணைந்து இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளதுடன், இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளன.

Bootstrap