போலந்தின் தலைமை நீதிபதி இடைநீக்கம் – நீதிமன்றம் முன்பாக வெடித்த போராட்டம்; மூவர் கைது!

போலந்தின் உயரிய நீதிமன்றமான அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போக்டன் ஸ்வியெட்ச்கோவ்ஸ்கி (Bogdan Święczkowski) நேற்று (30) இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் வார்சாவில் உள்ள நீதிமன்றத்திற்கு முன்பாகப் பெருமளவிலானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆபத்தான பொருட்களை வீசியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் அதிகளவிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலந்தின் அரசியலமைப்பு நீதிமன்றத்தைச் சூழ்ந்துள்ள நீண்டகால அரசியல் மற்றும் சட்ட நெருக்கடியே இந்த இடைநீக்கத்திற்கான பின்னணியாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக, தற்போதைய நாடாளுமன்ற பெரும்பான்மையினரால் தெரிவுசெய்யப்பட்ட நீதிபதிகள் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு தலைமை நீதிபதி தடையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தலைமை நீதிபதி மற்றும் அவரது பிரதிநிதியின் சட்டப்பாதுகாப்பு உரிமையை நீக்குமாறு கோரியுள்ளதாக போலந்து நீதியமைச்சர் வால்டெமார் சுரெக் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் தமது கடமைகளைச் செய்வதற்குத் தடையாக இருப்பதன் மூலம் அவர்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதாகவும் நீதியமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி போக்டன் ஸ்வியெட்ச்கோவ்ஸ்கி, போலந்தில் 2015 முதல் 2023 வரை ஆட்சியிலிருந்த தேசியவாதக் கட்சியான சட்டம் மற்றும் நீதி கட்சியினால் (PiS) நியமிக்கப்பட்டவர் ஆவார்.

குறித்த கட்சி ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொண்டதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பின்னர் நீதித்துறையை மீண்டும் சீரமைப்பது கடினமான செயல்முறையாக இருந்தாலும், அதற்காகத் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைமை நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான சட்டம் மற்றும் நீதி கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவில் நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Bootstrap