செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்ளும் பாரிய முதலீடுகள் தொடர்பான முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மை காரணமாக, அமெரிக்காவின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதன்படி, நேற்று (30) இடம்பெற்ற பங்குச் சந்தை வர்த்தகத்தில் Intel நிறுவனத்தின் பங்கு விலை 28 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet இன் பங்கு விலையும் மேலும் 1.4 சதவீதத்தால் சரிவடைந்துள்ளது.
இதற்கு முன்னர் வியாழக்கிழமையன்று Alphabet நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த நிலைமையால், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய Nasdaq பங்குச் சந்தைக் குறியீடு, 2025 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மிக மோசமான மாதாந்த வீழ்ச்சியை இந்த ஒக்டோபர் மாதத்தில் பதிவு செய்துள்ளது.
Meta, Alphabet, Oracle, Amazon மற்றும் Microsoft ஆகிய ஐந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் 2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காக சுமார் 800 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.
எனினும், இந்தப் பாரிய முதலீடுகளுக்கு ஏற்ப நிறுவனங்களின் வருமானம் போதுமானதாக அமையுமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், Google தேடுபொறியில் முதன்மையாகக் காண்பிக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் பதில்கள், நிறுவனத்தின் பிரதான விளம்பர வருமானத்தைப் பாதிக்கக்கூடும் என்ற தகவலை Alphabet நிறுவனம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று மாத்திரம் Alphabet நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், Alphabet நிறுவனம் இந்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளுக்காக 205 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிட எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, Intel நிறுவனமும் இந்தச் சந்தைச் சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சந்தை மூலதனம் 130 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கணினிகளுக்கான கேள்வி குறைந்து வரும் நிலையிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான முதலீடுகளை அதிகரிக்க Intel நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த ஆண்டில் நிறுவனத்தின் செலவினங்களை விட அதிகமான பண வரவை எதிர்பார்க்க முடியாது என அதன் நிதிப் பிரதானி டேவிட் சின்ஸ்னர் தெரிவித்துள்ளார்.