ஈரான் - இஸ்ரேல் இடையிலான தற்போதைய நேரடி யுத்தம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள், இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் ஒரு புதிய புவிசார் அரசியல் திருப்பத்தை நோக்கி நகர்கிறது.
நடப்புத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி பெரும்பான்மையை இழந்து 53 ஆசனங்களுடன் தத்தளிப்பதும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைப் பெற்று ‘ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக’ (Kingmakers) உருவெடுத்துள்ளதும், இஸ்ரேலின் மரபுவழி இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தை நெதன்யாகுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரபுக் கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாத இக்கட்டான சூழலில், நெதன்யாகு தனது தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாட்டை தளர்த்தவும், உள்நாட்டு அரபு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடிபணியவும் நேரிடும் என்பதால், இது இஸ்ரேல் வரலாற்றில் ஒரு தந்திரோபாயப் பாடமாகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இந்த உள்நாட்டு அரசியல் மாற்றம் அமெரிக்க - இஸ்ரேல் மூலோபாய உறவிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.
ஈரான் மீதான போரை தீவிரமாக ஆதரிக்கும் அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகமும், நெதன்யாகுவும் இணைந்து முன்னெடுக்கும் இராணுவ நகர்வுகளுக்கு, இஸ்ரேலின் புதிய கூட்டு அரசாங்கத்தில் அமையக்கூடிய அரபுக் கட்சிகள் ஒருபோதும் பச்சைக்கொடி காட்டப்போவதில்லை.
இந்த முரண்பாடு வோசிங்டன் மற்றும் டெல் அவிவ் இடையிலான வெளியுறவுக் கொள்கைகளில் ஒரு புதிய இடைவெளியைத் தோற்றுவிப்பதுடன், ஈரான் மீதான மேலதிக இராணுவ ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தி, பிராந்தியத்தில் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கான சூழலையும் உருவாக்கலாம்.
எனவே, ஈரான் - இஸ்ரேல் மோதல் முழுமையாக முடிவுக்கு வராவிட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஏதேச்சாதிகாரப் பிடியைத் தளர்த்தி, அரபு நாடுகளின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு புதிய புவிசார் அரசியல் சமநிலையை (Geopolitical Realignment) தோற்றுவித்துள்ளது எனலாம்.