இந்தியாவைத் தாக்கிய 'அர்னாப்' சூறாவளி: 7 பேர் பலி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவுக்குள் பிரவேசித்த 'அர்னாப்' (ARNAB) சூறாவளியின் தாக்கத்தினால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சூறாவளி காரணமாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 1, 097 கிராமங்களைச் சேர்ந்த 830 குடும்பங்களைச் சார்ந்த 59, 028 பேர் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் தொடர் மழை காரணமாக இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபா 4, 600 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கந்தமால் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்ஜகர் பகுதிக்குட்பட்ட 'கிடிபபாலி' என்ற மலைக்கிராமத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக 26 பேரை மட்டுமே கொண்ட இந்தக் கிராமத்தில் மண்சரிவில் சிக்கி 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாகப் இந்திய பிராந்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மழைக்கு மத்தியிலும் கிராம மக்கள் 13 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும், மண்சரிவு ஏற்பட்ட வேளையில் கிராமத்தில் தங்கியிருந்த மற்ற 13 பேரில் ஒருவரை மட்டுமே மீட்டு நிவாரண முகாமிற்கு அனுப்ப முடிந்துள்ளது.

காணாமல் போனதாகக் கருதப்படும் 12 பேரைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap