இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நகருக்கு மேலே உள்ள தொங்கும் பனிப்பாறைகளில் (Hanging Glaciers) இருந்து ஏற்படக்கூடிய பனிச்சரிவுகள் காரணமாக நகரின் உள்கட்டமைப்புகள் பெரும் ஆபத்தைச் சந்திக்கக்கூடும் என புதிய அறிவியல் ஆய்வு எச்சரித்துள்ளது.
'மத்திய இமயமலையின் பத்ரிநாத் நகர்ப் பகுதியில் உள்ள தொங்கும் பனிப்பாறை சரிவுகளின் பாதிப்பு மதிப்பீடு' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பத்ரிநாத் நகருக்கு மேல் அமைந்துள்ள மூன்று முக்கியத் தொங்கும் பனிப்பாறைகள் தீவிரமாக ஆராயப்பட்டன.
பனிப்பாறைகள் உடைந்து சரிவு ஏற்படும் பட்சத்தில், பத்ரிநாத்தில் உள்ள சுமார் 398 கட்டிடங்கள், 2.66 கிலோமீற்றர் தொலைவிலான போக்குவரத்து பாதைகள் மற்றும் ஹெலிபேட், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அத்தியாவசிய பொது உள்கட்டமைப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
பனிச்சரிவின் தாக்கத்தால் சுமார் 15.57 ஹெக்டேர் வனப்பகுதிகளும், 3.87 ஹெக்டேர் விவசாய நிலங்களும் அழிவைச் சந்திக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பனிச்சரிவு பயணிக்கும் தூரமானது பனியின் அளவை மட்டும் பொறுத்தது அல்ல; மலையின் சீரற்ற அமைப்பும் சரிவுகளின் தீவிரமும் குறைந்த அளவு பனியைக் கூட நீண்ட தூரத்திற்கு அடித்துச் செல்லக் கூடும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பத்ரிநாத் நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடி முன்னெச்சரிக்கை அமைப்புகளை (Early Warning Systems) நிறுவ வேண்டும் என்றும், நிலப் பயன்பாட்டைச் சரியாகத் திட்டமிட்டு பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.