ஜேர்மனியில் ஆரம்பமான ஜென்சீ போராட்டம் கலவரமாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறும் வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
'Gen Z regelt' எனும் இளைஞர் அமைப்பினால் ஜெர்மனியின் பெர்லின், பிராங்பர்ட் மற்றும் முனிச் உட்பட 34 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்டாய இராணுவச் சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல், கல்வித் துறைக்கு அதிக நிதி வழங்குதல் மற்றும் இளைய தலைமுறையினர் எதிர்நோக்கும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளல் என்பன இந்தப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
ஐரோப்பா முழுவதும் இவ்வருடம் பரவிய Gen Z இளைய தலைமுறையினரின் போராட்ட அலையின் மற்றொரு நீட்சியாக இந்தப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பிராங்பர்ட் நகரில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்களின் போது முகங்களை மூடிக்கொண்ட சிலர் கடைகளைக் கொள்ளையடிப்பதற்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தமையால் நிலைமை வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது இரண்டு கடைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல கடைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஹம்பேர்க் (Hamburg) நகரில் சில வீதித் தடைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று (31) வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்த 182,000 என்ற எண்ணிக்கையை விடக் குறைவான தொகையாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராங்பர்ட், முனிச் மற்றும் பெர்லின் நகரங்களில் மட்டுமே சுமார் 18,000 போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இடம்பெறும் காலப்பகுதிக்கு இணையாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக ஜேர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தீவிரவாதக் குழுக்கள் இந்தப் போராட்ட இயக்கத்தைத் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.