சைபர் தாக்குதலுக்குப் பின்னர் Binance இலிருந்து 3.64 பில்லியன் டொலர் மீளப்பெறப்பட்டது!

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் (Binance), பாரிய சைபர் தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் சுமார் 3.64 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை மீளப்பெற்றுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற சைபர் தாக்குதலில் சுமார் 6.3 பில்லியன் டொலர் பெறுமதியான டிஜிட்டல் சொத்துக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் அனைத்து பரிவர்த்தனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

இந்தத் தாக்குதலுக்கு வடகொரியாவுடன் தொடர்புடைய 'TraderTraitor' எனப்படும் சைபர் குற்றக் குழுவே காரணம் என அமெரிக்காவின் FBI உள்ளிட்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

நவம்பர் 1ஆம் திகதி மாத்திரம் 4.649 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் மீளப்பெறப்பட்டுள்ளதுடன், 1.01 பில்லியன் டொலர் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் திருடப்பட்ட சொத்துக்களில் சுமார் 95 சதவீதத்தை ஈடுசெய்துள்ளதாகவும், எஞ்சிய இழப்புகளையும் முழுமையாக ஈடுசெய்வதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த சைபர் குற்றக் குழுவுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி பணப்பை முகவரிகளை FBI வெளியிட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவருக்குச் சொந்தமான மடிக்கணினி ஊடுருவப்பட்டதன் மூலம் இந்தத் தாக்குதல் ஆரம்பித்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பைனான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், Bitcoin மற்றும் Ethereum உள்ளிட்ட முக்கிய கிரிப்டோகரன்சிகளுக்கான பண மீளப்பெறுதல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சேவைகளும் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர் கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap