இஸ்ரேல் அரசியலில் பதவிப் பகிர்வு விவாதம்: புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரம்

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-(The Knesset ) க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதே நேரம் இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட் லிஸ்ட் (joint List ) மற்றும் ராம் (Ra'am) கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இஸ்ரேலில் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், இருக்கும் குழப்பமான சூழலை சரிசெய்ய அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி ஓர் அரசு அமைந்தால், பிரதமர் பதவியை இரு தலைவர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பகிர்ந்துகொள்ளும் திட்டம் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் நிலையில், பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டுடன் பிரதமர் பதவியை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் நெதன்யாகு நிராகரிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை ஏற்கவில்லை என தெரிகிறது. நெதன்யாகு பதவிக்காலத்தின் நடுவில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதால், பதவிப் பகிர்வு நடக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

மற்றொருபுறம் தேர்தலில் 19 இடங்களைப் பெற்றுள்ள 'ராஆம்' (Ra'am) மற்றும் 'ஜாயிண்ட் லிஸ்ட்' (Joint List) போன்ற அரபுக் கட்சிகள், நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் 61 இடங்களுக்கும் அதிகமான ஆதரவைத் திரட்டி, புதிய ஆட்சி அமைக்க உரிமை கோர எதிர்க்கட்சி அணி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் யாயிர் கோலன் ஆகியோர் ஐஸன்காட்டை பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைக்க தயாராக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஐஸன்காட் தலைமையில் புதிய அரசு அமையுமா, அல்லது நெதன்யாகுவுடன் பதவிப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுமா என்பதே இப்போது இஸ்ரேல் அரசியலின் முக்கிய கேள்வியாக உள்ளது.

Bootstrap