16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: வழக்கு விசாரணை தொடக்கம்!

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நாட்டின் உயர் நீதிமன்றத்தில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று மற்றும் நாளை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெறும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முக்கிய சமூக ஊடகத் தளங்களில் கணக்குகளை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சட்டம் சிறுவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் விவகாரங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்வதையும் கட்டுப்படுத்துவதாகக் கூறி Digital Freedom Project என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த அமைப்பிற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ரூடிக் தலைமை தாங்குகிறார்.

இதனிடையே, பிரபல சமூக ஊடகத் தளமான ‘ரெடிட்’ (Reddit) இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தனியாக மற்றொரு வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன், அந்த வழக்கும் இதனுடன் இணைத்து விசாரணை செய்யப்படவுள்ளது.

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டாலும், சமூக ஊடகங்களை முற்றிலுமாகத் தடை செய்வதற்குப் பதிலாக, மேலும் பயனுள்ள பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரெடிட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்தச் சட்டம் Facebook, Instagram, TikTok, YouTube, Reddit, Snapchat, X, Threads, Twitch மற்றும் Kick ஆகிய 10 சமூக ஊடகத் தளங்களுக்குப் பொருந்தும்.

இந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கணக்குகளைப் பராமரிப்பதைத் தடுக்க அந்தந்த நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தை தீவிரமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ மீறும் நிறுவனங்களுக்கு 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்து இதுவரை எந்தவொரு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை Facebook, Instagram, YouTube, Snapchat, மற்றும் TikTok போன்ற நிறுவனங்கள் இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பது குறித்து அவுஸ்திரேலியாவின் இணையவழிப் பாதுகாப்பு ஆணையாளர் பல விசாரணைகளைத் தொடங்கியுள்ளார்.

மேலும், தடை அமுல்படுத்தப்பட்டதில் இருந்து 10 சமூக ஊடகத் தளங்களில் 16 வயதுக்கு உட்பட்ட பயனர்களுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட சுமார் 50 இலட்சம் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவோ அல்லது முடக்கப்பட்டுள்ளதாகவோ தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சில சிறுவர்கள் வயது சரிபார்ப்பு முறைகளை மீறி தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க இந்தச் சட்டம் அத்தியாவசியமானது என அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் சட்டப்பூர்வ சவால்கள் இருந்தபோதிலும், சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் இந்தச் சமூக ஊடகத் தடையின் எதிர்காலத்திற்கும், இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள பிற நாடுகளுக்கும் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Bootstrap