பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில் 14,000 பவுண்டுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 56 வயதான ஜோன் மெக்நீல் என்பவருக்கு சிறைத்தண்டனைக்குப் பதிலாக 300 மணிநேர சமூக சேவையில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நெடுஞ்சாலையில் சென்ற சிற்றூந்தை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அதில் போதைப்பொருட்களுடன் பின்இருக்கையில் ஆட்டுக்குட்டி ஒன்றும் இருந்துள்ளது.
'பாப்லோ' எனப் பெயரிடப்பட்ட அந்த ஆட்டுக்குட்டி, போதைப்பொருள் இருந்த சிற்றூந்தில் உருளைக்கிழங்கு வறுவல் அடங்கிய பையிலிருந்து உணவருந்திக் கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றூந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை காவல்துறையின் மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
இந்த வழக்கில் ஜோன் மெக்நீல் மற்றும் லிண்ட்சே சாங்ஸ்டர் ஆகியோர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி, மெக்நீலுக்கு 300 மணிநேர சமூக சேவையுடன், ஆறு மாதங்களுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டிலேயே இருக்கவும் மின்னணுக் கண்காணிப்புச் சாதனத்தை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத லிண்ட்சே சாங்ஸ்டரைக் கைது செய்வதற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த ஆட்டுக்குட்டி அதன் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.