வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துமாறு கோரி, பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 12,500 டாக்கா குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 30,000 டாக்காவாக அதிகரிக்குமாறு கோரி, தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல தொழில்துறை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் அதிர்ச்சிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் ஆடை உற்பத்தித் துறையில் சுமார் 40 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அத்துடன், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை இந்தத் துறை வழங்குகின்றது. போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் 8,000 டாக்காவிலிருந்து 12,500 டாக்காவாக அதிகரிக்கப்பட்டது.
எனினும், அதன் பின்னர் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தற்போதைய சம்பளம் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை எனத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சம்பள நிர்ணய சபையை அரசாங்கம் அமைத்துள்ளது. எனினும், சம்பள உயர்வு தொடர்பில் உறுதியான அறிவிப்பு வெளியாகாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன.
சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கு ஆடைகளை உற்பத்தி செய்து வழங்கும் பங்களாதேஷின் ஆடைத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டம், நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.