பிரித்தானியா - மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் தாக்குதல் சம்பவங்களுக்கு மத்தியில், பிரித்தானிய மக்களை குறைந்தது மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் பெல்ஜியம், லக்சம்பர்க், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து, எஸ்தோனியா மற்றும் பின்லாந்து உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் கட்டமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெப்பநிலை வழக்கமான ஐந்து பாகை செல்சியஸிலிருந்து 50 பாகை செல்சியஸ் வரை அதிகரித்ததாகவும், இதன் காரணமாக உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளின் இணையவழிப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பமான காலம் முதல் பிரித்தானியா மீது ரஷ்யா விடுத்து வரும் எச்சரிக்கைகளும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.

கடந்த காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடனான தொலைபேசி உரையாடலின்போது, ரஷ்யாவினால் பிரித்தானியாவை மிகக் குறுகிய நேரத்தில் அழிக்க முடியும் என அச்சுறுத்தியதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.

Bootstrap