பிரான்சில் மாபெரும் பேரணி: வல்லரசுகளின் சதியும் புலம்பெயர் தமிழர் நிலையும்!

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய வல்லரசுத் தேசங்களின் வீதிகளில் அண்மைக்காலமாக வெடித்துக் கிளம்பும் வன்முறைகளும், மக்கள் எழுச்சிகளும் உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

வாழ்க்கைச் செலவு உயர்வு, பணவீக்கம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான பூர்வீகக் குடிகளின் அதிருப்தி போன்ற உள்நாட்டுக் காரணிகளால் தோன்றும் இந்த வன்முறைக் தீயை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கப் பின்னணியில் நின்று சில உலகப் பேராதிக்க சக்திகள் காய் நகர்த்தி வருகின்றனவா என்ற ஆழமான சந்தேகம் இன்று மேலெழுந்துள்ளது.

ரஷ்யா - சீனா போன்ற நாடுகள், ஐரோப்பியச் சமூகக் கட்டமைப்பில் ஏற்கனவே நிலவும் பிளவுகளையும் இனவாதப் போக்குக்களையும் சமூக ஊடகங்களின் போலிப் பிரசாரங்கள் மற்றும் இணையவழி நாசவேலைகள் மூலமாகத் திட்டமிட்டுப் பல மடங்கு ஊதிப் பெருப்பித்து வருவதாக பைனான்சியல் ரைம்ஸ் (Financial Times) யூரோ நியூஸ் (Euronews) டொய்ச் வெல்லே (Deutsche Welle) போன்ற பிரதான சர்வதேச ஆங்கில ஊடகங்கள் புலனாய்வுச் செய்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளன.

யுக்ரைன் போரின் விளைவுகளால் திணறும் ஐரோப்பாவை உள்நாட்டுக் குழப்பங்களுக்குள் ஆழ்த்தி, அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தின் மைய அச்சைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதே இந்த மறைமுகப் பூகோள அரசியல் சதிகளின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், பேரரசுகளின் இந்த அதிகாரப் போட்டிக்கும் வன்முறைச் சூறாவளிக்கும் நடுவே சிக்கி, தங்களின் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தோடும் தவிப்போடும் வாழ்பவர்கள் அந்த தேசங்களில் பிரஜாவுரிமை பெற்று வாழும் ஈழத்தமிழர் உள்ளிட்ட புலம்பெயர் மக்களே ஆவர்.

குறிப்பாக, ஈழத்து மண் சுமந்த போரின் வடுக்களோடும் வலிகளோடும் அங்கே தஞ்சம் புகுந்து உழைத்து வாழும் ஈழத்தமிழர்களின் நிலை இன்று பெரும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் எழுச்சியும், வெளிநாட்டினருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியும் பூர்வ குடிகளிடையே திட்டமிட்டு விதைக்கப்பட்டு வரும் நிலையில், கடின உழைப்பால் அத்தேசங்களின் பொருளாதாரத்திற்குத் பங்களிப்புச் செய்யும் தமிழ் மக்கள், எப்போது என்ன நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரான்சின் வீதிகளில் எரியும் நெருப்பும், ஜேர்மனியின் சட்டதிட்ட இறுக்கங்களும் அங்குள்ள தமிழ் வணிகர்களையும், தங்களின் அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தப் போராடும் குடும்பங்களையும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதித்துள்ளன.

உலகளாவிய சதிகளின் பின்னணியில் பெருக்கமடையும் இந்த இனவாதப் பிரசாரங்கள், காலம் காலமாகத் தமிழ் மக்கள் அங்கு கட்டியெழுப்பிய சமூக அந்தஸ்தையும் அமைதியான வாழ்வையும் சிதைக்க முற்படுவதுடன், அவர்களைத் தாயகத்தை நோக்கி ஏங்க வைக்கும் ஒரு நிர்பந்த சூழலையும் மறைமுகமாகத் தோற்றுவித்து வருகின்றது.

மேற்கில் நிகழும் இத்தகைய மாற்றங்கள், இலங்கையின் வடக்குக் கிழக்குத் தாயக மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பாடத்தையும் எச்சரிக்கையையும் உணர்த்தி நிற்கின்றன.

காலனியாதிக்க காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ உள்நாட்டு யுத்தங்களையும், பேரழிவுகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்த இலங்கைத் தீவின் மக்கள், இன்னும் சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் ஆதிக்கப் போட்டிகளுக்குள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் கசப்பான உண்மையோடு உணர்ந்துகொள்ள வேண்டும்.

வல்லரசு நாடுகள் தங்களின் சுயலாபத்திற்காக ஒரு நாட்டின் இறையாண்மையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் எப்படிச் சீர்குலைக்க முடியும் என்பதற்கு தற்போதைய ஐரோப்பியச் சூழலே ஆகச் சிறந்த சான்றாகும்.

எனவே, இனவாதத் தீயினாலும் பிரித்தாளும் சூழ்ச்சிகளினாலும் ஒரு தேசம் பலவீனமடைந்தால், அது சர்வதேச வல்லூறுகளுக்கு மட்டுமே இரையாகும் என்பதை வடக்கிலும் தெற்கிலும் வாழும் இலங்கை மக்கள் தங்களுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கடந்து, அறிவுப் பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் சிந்தித்து, நாட்டைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பை ஏற்கும் தருணமிது.

இந்த இக்கட்டான சமூகச் சூழலின் தீவிரத்தை மேலும் வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில், எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி பிரான்ஸ் தேசமே ஸ்தம்பிக்கும் வகையிலான ஒரு மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டமும் பிரம்மாண்ட பேரணியும் பிரான்சிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் (CGT, CFDT, FO, UNSA, FSU) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாடசாலைக் கட்டமைப்புச் சீரழிவு, கல்வித்துறைப் புறக்கணிப்பு மற்றும் கடுமையான பணவீக்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக மாணவர்களாலும் இளைய தலைமுறையினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் போராட்டங்களின் இறுதி வடிவமாக இந்த மாபெரும் வேலைநிறுத்தம் வெடிக்கவுள்ளது.

பிரான்சின் பிரதான ரயில் போக்குவரத்து, அதிவேக சேவைகள், பாடசாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என சகல துறைகளையும் முடக்கும் இப்போராட்டமானது, தலைநகர் பாரிசின் பேஸ்டில் (Bastille) சதுக்கத்திலிருந்து கொன்கோர்ட் (Concorde) நோக்கிப் பேரணியாக நகரவுள்ளதால் அத்தேசத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்படவுள்ளது.

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்சிய ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நவம்பர் 5 திகதிய போராட்டத்தின் தாக்கம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசியல் சக்திகள் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

இதன் நேரடி விளைவாக, அங்கு வாழும் தமிழ் வணிகர்களின் அன்றாட வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், போராட்டக் களங்களில் தீவிர வலதுசாரிகளின் ஊடுருவலால் ஏற்படக்கூடிய வன்முறைகள் புலம்பெயர் தமிழர்களின் பாதுகாப்பை மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் என்பதுடன், இத்தகைய உலகளாவிய கொந்தளிப்புகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் ஏதோ ஒரு வகையில் உலுப்பிவிடும் என்ற எச்சரிக்கையையும் மக்களுக்குத் தந்து நிற்கிறது.

Bootstrap