தமிழ் திரையுலகில் ‘ஆக்ஷன் கிங்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்றுள்ளது.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இளைய மகள் அஞ்சனா, பேஷன் டிசைனிங் துறையில் கல்வி பயின்றதுடன், பெண்களுக்கான கைப்பைகளைத் தயாரிக்கும் நிறுவனமொன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த இஷாய் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாகக் காதலித்து வந்த அஞ்சனாவுக்கு, சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் திகதி ஸ்பெயினில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண நிகழ்வில் தம்பி ராமைய்யாவும் அவரது மகன் உமாபதியும் கலந்துகொள்ளவில்லை. எனினும், நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரும் பங்கேற்றிருந்தனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து சுமார் 15 நாட்களுக்குப் பின்னரே திருமணம் நடைபெற்றதால், இரு குடும்பங்களுக்கும் இடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் எனச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
எனினும், சென்னையில் பணிகள் இருப்பதன் காரணமாகவே தம்பி ராமைய்யாவும் அவரது மகனும் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.