மோசடி வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக இளவரசர் ஆண்ட்ரூவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவுக்கு பிரித்தானிய உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால், அந்த சம்மன் கோடீஸ்வரர் எப்ஸ்டீன் தொடர்புடைய வழக்குக்காக அல்ல!

2019ஆம் ஆண்டு, துருக்கி நாட்டு கோடீஸ்வர பெண்மணியான நெபாஹாத் (Nebahat Isbilen) என்பவரை, அவரது சட்ட ஆலோசகரான சல்மான் (Selman Turk) என்பவர் ஏமாற்றி, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு பெரும் தொகை ஒன்றைக் கொடுக்கவைத்ததாக வழக்கு.

பாஸ்போர்ட் பெறுவதற்காக அந்தத் தொகையைக் கொடுப்பதாக தான் நம்பவைக்கப்பட்டதாக நெபாஹாத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை மறுத்துள்ள சல்மான், அந்தத் தொகை இளவரசர் ஆண்ட்ரூவின் நட்பைப் பெறுவதற்காக நெபாஹாத் தானே முன்வந்து கொடுத்த தொகை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், 2021ஆம் ஆண்டு, ஆண்ட்ரூ அந்தத் தொகையை நெபாஹாத்துக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆக, வழக்கு, சல்மான் நெபாஹாத்தை ஏமாற்றினாரா என்பது தொடர்பானது. அதில் ஆண்ட்ரூ முக்கிய சாட்சியாக உள்ளதாலேயே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோக, 2020ஆம் ஆண்டு, நெபாஹாத் ஆண்ட்ரூவுக்கு 768,000 பவுண்டுகள் கொடுத்ததாகவும், அது கடனாகக் கொடுக்கப்பட்டதாகவும் சல்மான் தெரிவித்துள்ளார்.

அது குறித்தும் வழக்கு விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு ஆண்ட்ரூவுக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் 750,000 பவுண்டுகளில், 350,000 பவுண்டுகள் ஆண்ட்ரூவுக்கும், 225,000 பவுண்டுகள், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாராவுக்கும், 25,000 பவுண்டுகள், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜீனிக்கும் கொடுக்கப்பட்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அந்த 750,000 பவுண்டுகள், இளவரசி பீட்ரைஸின் திருமணத்துக்கான பரிசு என்றும் கூறப்படுகிறது.

Bootstrap