ஜேர்மனியைப் போல கொரியாவும் இணைய விருப்பம் தெரிவித்த சேன்ஸலர்:

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், சமீபத்தில் அரசுமுறைப்பயணமாக தென்கொரியாவுக்குச் சென்றிருந்தார்.

அப்போது, ஜேர்மனியைப் போல கொரியாவும் இணைய விருப்பம் தெரிவித்திருந்தார் அவர்.

அக்டோபர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் தென்கொரியாவுக்குச் சென்றிருந்த மெர்ஸ், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ராணுவமயமற்ற பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஜேர்மனி ஒன்றிணைந்ததை நினைவுகூர்ந்த அவர், கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்ததைப்போல, ஒருநாள் வடகொரியாவும் தென்கொரியாவும் இணையும் என நம்புவோம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், அந்த இடத்திலுள்ள வடகொரிய பகுதிக்கு சென்ற மெர்ஸ், ஒரு நாடு பிரிவதால் ஏற்படும் வலியையும், மீண்டும் இணையவேண்டும் என்னும் ஆழ்ந்த விருப்பத்தையும் இந்த பகுதியிலாவது உணரலாம் என்றும் கூறினார்.

ஆனால், ஜேர்மனியைப்போல வடகொரியாவும் தென்கொரியாவும் இணைவது சாத்தியமா?

எடுத்த உடனேயே, இணைவதைக் குறித்து எதற்கு கவலைப்படவேண்டும் என்கிறார்கள் கொரியாவின் இளைய தலைமுறையினர்!

அதாவது, இருதரப்புக்குமே, இணையவேண்டும் என்னும் விருப்பம் இருப்பதுபோல் தெரியவில்லை.

கொரியா இணையவேண்டும் என்னும் உணர்வு மாறி தசாப்தங்களாகிவிட்டது என்கிறார், க்யுங் ஹீ பல்கலையில் வெளியுறவுக் கொள்கை பேராசிரியராக பணியாற்றும் சூ ஜேவூ.

தென்கொரிய இளைய தலைமுறையினர், வடகொரியாவை தங்களுக்கு அருகே அமைந்துள்ள இன்னொரு நாடாகத்தான் பார்க்கிறார்கள் என்று கூறும் அவர், அது ஒரு ஏழை நாடு என்றும், அதனால் நமக்கு அச்சுறுத்தல் என்றும்தான் அவர்கள் எண்ணுகிறார்கள் என்கிறார்.

தென்கொரியாவைப் பொருத்தவரை, வடகொரியா தங்களுடன் இணையுமானால், வடகொரியாவின் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை சீரமைக்கவே பெரிய அளவில் பணம் செலவளிக்கவேண்டியிருக்கும் என்ற எண்ணம் தென்கொரியாவுக்கு உள்ளது.

வடகொரியாவுக்கோ, தன் அதிகாரத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது!

அத்துடன், வடகொரியா தென்கொரியாவை எதிரியாகத்தான் பார்க்கிறது என்று கூறும் சூ ஜேவூ, தென்கொரியாவுடன் நெருக்கம் காட்டும் எண்ணமே வடகொரியாவுக்கு இல்லை என்கிறார்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், தென்கொரியா, அமெரிக்காவின் கூட்டாளர் நாடு, வடகொரியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறது.

ஆக, வடகொரியாவும் தென்கொரியாவும் இணைவதை அந்த வல்லரசு நாடுகளும் விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap