தற்காலத்தில் இளம் வயதினரே சமூக வலைத்தளங்களில் மூழ்கி சோம்பேறிகளாக இருக்கும் போது, வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஜப்பானைச் சேர்ந்த 90 வயது பாடிபில்டர் தோஷிசுகே கனசாவா (Toshisuke Kanazawa).
ஸ்பெயினின் சாண்டா சுசானாவில் நடைபெற்ற சர்வதேச ஆணழகன் போட்டியில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
90 வயதிலும் இளம் வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து, தனது கட்டுக்கோப்பான உடலையும் தசை வலிமையையும் மேடையில் வெளிப்படுத்தினார்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க முடியாவிட்டாலும், சர்வதேச மேடையில் இளம் தலைமுறையினருடன் போட்டியிட்டதே தனக்குப் பெருமையான வெற்றி என்கிறார் கனசாவா.
தனது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாரம்பரிய ஜப்பானிய உணவுப் பழக்கம், முறையான உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையே முக்கியக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.
வயது அதிகரிப்பதைக் காரணம் காட்டி ஆசைகளையும் இலக்குகளையும் கைவிடக் கூடாது என்பதே தனது பயணத்தின் மூலம் அவர் உலகுக்கு உணர்த்த விரும்பும் செய்தி.
90 வயதில் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே சாதனையல்ல, அந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் போட்டிக் களத்தில் இறங்கும் மனவலிமையே மிகப்பெரிய வெற்றி என்பதை நிரூபித்துள்ளார் இந்த முதியவர். இந்த விடயம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகின்றது.