பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பவுண்ட்!

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெக்சிட் (Brexit) பொதுவாக்கெடுப்புக்குப் பின்னர், பிரித்தானிய பவுண்டின் ஒட்டுமொத்தப் பரிமாற்றப் பெறுமதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் பதிவான உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக அமெரிக்க டொலர் மற்றும் யூரோவுக்கு எதிராகப் பிரித்தானிய பவுண்ட் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து மத்திய வங்கியின் தரவுகளின்படி, உலகின் 18 முக்கிய நாணயங்களின் கூட்டுத் தொகைக்கு எதிராகப் பிரித்தானிய பவுண்டின் பெறுமதியை அளவிடும் குறியீடு 86.4 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இது 2016 ஜூன் மாதம் நடைபெற்ற பிரெக்சிட் பொதுவாக்கெடுப்புக்குப் பின்னர் பதிவான சமமான உச்சப் பெறுமதியாகக் கருதப்படுகிறது.

குறித்த குறியீட்டில் 2005ஆம் ஆண்டு பவுண்டின் பெறுமதி 100 புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், புதிய பெறுமதி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவுள்ளது.

2016ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, பவுண்டின் பெறுமதி கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

அதனைத் தொடர்ந்து பிரெக்சிட் நடைமுறை, கொவிட் பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சிறு வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றாலும் பிரித்தானிய நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது.

எனினும், பிரித்தானியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் மீண்டும் வலுப்பெற்று வருவது ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னாள் பிரித்தானிய திறைசேரி அமைச்சரும் பொருளாதார நிபுணருமான ஜிம் ஓ'நீல் (Jim O'Neill), பிரித்தானியப் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் வலிமையைப் பலரும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பவுண்டின் பெறுமதி வலுப்பெறுவது இறக்குமதிப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும் பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் வெளிநாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதிலும் பிரித்தானிய நுகர்வோரின் கொள்வனவுத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பிரித்தானியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும், எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு நுகர்வோரின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழலில், இங்கிலாந்து மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு வட்டி வீதங்கள் தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளது. இதன்போது, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

நேற்று அந்நாட்டு நேரப்படி இரவு 11.01 மணியளவில், அமெரிக்க டொலருக்கு எதிராகப் பிரித்தானிய பவுண்டின் பெறுமதி 0.28 சதவீதத்தால் அதிகரித்து 1.3434 டொலராகப் பதிவாகியிருந்தது. அதேநேரம், யூரோவுக்கு எதிராகப் பிரித்தானிய பவுண்டின் பெறுமதி 1.1996 யூரோக்களாகக் காணப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap