ஈரான் மீதான போர் காரணமாகவே குடியரசுக் கட்சியினர் கடும் பின்னடைவை எதிர்கொண்டதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரான் மீது முன்னெடுக்கப்பட்ட போரும், அதனால் ஏற்பட்டுள்ள அதிகரித்த செலவுகளும் மற்றும் பிற சிக்கல்களும் காரணமாக, 2024-ல் தமக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ஆதரவளித்த குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இந்த ஆண்டு அக்கட்சியைக் கைவிட்டனர் என்பதை வேன்ஸ் ஒப்புக்கொள்கிறார்.
இதனிடையே, ஈரானுடனான போர் குறித்த தனது விரக்தியையும் ட்ரம்ப் நேற்று இரவு குறிப்பாகச் சுட்டிக்காட்டினார் என்று வேன்ஸ் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், பல மாதங்களாகப் பகிரங்கமாக அந்தப் போரை ஆதரித்து வந்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி, ட்ரம்பை விட மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வேன்ஸ் பதிவிட்ட அசாதாரணமான கருத்துகள், ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து ட்ரம்ப் மேற்கொண்டு வரும் ஆலோசனைகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்; இந்த நடவடிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுகள் பென்டகனின் மூத்த அதிகாரிகளின், குறிப்பாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன. ஹெக்ஸெத் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கடும் நெருக்கடியில் உள்ளார்; அங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை (impeachment) முன்னெடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அதிகாரிகளின் முந்தைய பரிந்துரை சரியான ஆலோசனையே என்றும் வேன்ஸ் தற்போது கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று, ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டின் மீதும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்; பல தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக, குடியரசுக் கட்சியின் கோட்டைகளில் அவர்கள் பெரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்பை இரண்டாவது முறையாகப் பதவியில் அமர்த்திய கனசர்வேட்டிவ் கோட்டைகளைச் சேர்ந்த வாக்காளர்கள், ஜனநாயகக் கட்சியினருக்கு பெருவாரியாக ஆதரவளித்துள்ளனர்.
ஈரானுடனான போர் குறித்த ஆழ்ந்த அதிருப்தி, விலைவாசி உயர்வு குறித்த கவலை மற்றும் நாட்டை ட்ரம்ப் வழிநடத்திய விதம் மீதான கோபம் ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
இந்த நிலையில், ட்ரம்புடன் தனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளை முக்கியத்துவமற்றதாகக் காட்ட முயன்ற வேன்ஸ், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் தோல்வியடைந்ததற்கு ஈரான் விவகாரமே காரணம் என்பதை ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
ஆனால், ட்ரம்பின் கருத்துக்கள் மிகவும் நிதானமானவையாக இருந்தன; ஈரான் போர் என்பது தோல்விக்கு பல காரணங்களில் ஒன்று மட்டுமே என்று அவர் விளக்கமளித்துள்ளார்.