அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் எதிர்கால ஜனாதிபதிகள் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில் புதிய நிறைவேற்று உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, ஓவல் அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள சில அறைகள் தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தின் கட்டட அமைப்பு மற்றும் பாரம்பரியத் தன்மையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓவல் அலுவலகத்தின் வரலாற்று மற்றும் கட்டடக்கலைச் சிறப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தேசிய பூங்காக்கள் சேவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், அலுவலகத்தின் அலங்காரங்கள், தளபாடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் முழுக் கட்டடமும் ஏற்கனவே தேசிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஓவல் அலுவலகத்தின் சுவர்களில் தங்க நிற அலங்காரங்களைச் சேர்த்தமை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார்.
இந்தநிலையில், வொஷிங்டனில் உள்ள ஏனைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் பாதுகாப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் போதிய அக்கறை காட்டவில்லை என வரலாற்றுப் பாதுகாப்பு நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.