அமெரிக்க இடைக்காலத் தேர்தல் எதிரொலி – தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பாரிய சரிவு!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன.

இதன் விளைவாக, அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தைச் சுட்டெண் 5.5 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் ஒரே நாளில் சுமார் 2.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பு இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 9 வீதத்திற்கும் அதிகமாகவும், AMD மற்றும் மைக்ரோன் நிறுவனங்களின் பங்குகள் 17 வீதத்திற்கும் அதிகமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதேவேளை, ஆப்பிள், என்விடியா, டெஸ்லா உள்ளிட்ட முன்னணி ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பிலும் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிய சந்தைகளிலும் இந்தத் தாக்கம் எதிரொலித்துள்ளது.

ஜப்பானின் நிக்கெய் சுட்டெண் 6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததுடன், தென்கொரியாவின் கோஸ்பி சுட்டெண் 8.5 வீதத்திற்கும் அதிகமாகச் சரிந்ததால் பங்குப் பரிவர்த்தனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தரவு மையங்களின் (Data Centres) கட்டுமானத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதி அளித்திருந்தனர்.

இதனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் குறையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காகப் பெருமளவில் செலவிடப்படும் நிதி எதிர்பார்த்த இலாபத்தை வழங்குமா என்ற சந்தேகமும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

Bootstrap