கலிபோர்னியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 548 கைதிகளின் தண்டனைகள் ஆயுள் தண்டனையாக மாற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள 548 கைதிகளின் தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ஆளுநர் கவின் நியூசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த கைதிகளுக்கு விடுதலை வாய்ப்புகள் இன்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

1978ஆம் ஆண்டு மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 13 பேருக்கு மாத்திரமே அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனை முறைமையில் தவறுகள் இடம்பெறுவதுடன், நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயமும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மரண தண்டனை கலிபோர்னியாவின் பெறுமதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் மரண தண்டனையை 2019ஆம் ஆண்டிலேயே ஆளுநர் இடைநிறுத்தியிருந்தார்.

தற்போதைய தீர்மானம் நீதிமன்றச் செலவுகளைக் குறைக்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மரண தண்டனையை முழுமையாக நீக்குவதற்கு மாநில சட்டமன்றம் அல்லது பொதுமக்களின் வாக்கெடுப்பு அவசியம் என லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தின் தலைமை சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது 27 மாநிலங்களில் மரண தண்டனை சட்டபூர்வமாக நடைமுறையில் உள்ளதுடன், 23 மாநிலங்களிலும் வொஷிங்டன் டி.சி.யிலும் அது நீக்கப்பட்டுள்ளது.

Bootstrap