இலங்கையில் 10 மாதங்களில் 289 யானைகள் பலி – அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

இலங்கையில் 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 289 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 95 யானைகளின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, துப்பாக்கிச் சூடு, மின்சாரம் தாக்குதல் மற்றும் வெடிபொருள் பொறிகள் (ஹக்கப்பட்டாஸ்) ஆகியவை யானைகளின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாகப் பதிவாகியுள்ளன.

இதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 42 யானைகளும், மின்சாரம் தாக்கி 34 யானைகளும், உணவில் வைக்கப்பட்ட வெடி (ஹக்கப்பட்டாஸ்) வெடிப்பினால் 34 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், சடலம் அழுகியதால் ஏற்பட்ட பாதிப்புகளால் 23 யானைகளும், காயங்கள் தொற்றுக்குள்ளானதால் 11 யானைகளும் உயிரிழந்துள்ளன.

புழுத் தொற்று காரணமாக 9 யானைகள் உயிரிழந்துள்ளன.

நீரில் மூழ்கி மற்றும் விபத்துகளில் தலா 7 யானைகளும், கிணறுகள் மற்றும் குழிகளில் விழுந்து 8 யானைகளும் உயிரிழந்துள்ளன.

அத்துடன், விஷம் கொடுக்கப்பட்டதால் 4 யானைகளும், தொடருந்து விபத்துகளில் 3 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இயற்கையான காரணங்கள், சிதைவடைதல் மற்றும் பொலித்தீன் காரணமாக தலா 2 யானைகளின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய காரணங்களால் 3 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், இரத்தத்தில் நச்சுத் தொற்று (Septicaemia) காரணமாக எந்தவொரு யானையின் உயிரிழப்பும் பதிவாகவில்லை.

பிராந்திய ரீதியாக, கிழக்கு வனஜீவராசிகள் பிராந்தியத்திலேயே அதிகளவான யானை உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 60 யானைகள் உயிரிழந்துள்ளன.

அனுராதபுரத்தில் 57 யானைகளும், பொலன்னறுவையில் 42 யானைகளும் உயிரிழந்துள்ளன.

ஊவா பிராந்தியத்தில் 33 யானைகளும், வடமேற்கு வனஜீவராசிகள் பிராந்தியத்தில் 21 யானைகளும், தெற்கு வனஜீவராசிகள் பிராந்தியத்தில் 19 யானைகளும் உயிரிழந்துள்ளன.

மேலும், வவுனியாவில் 18 யானைகளும், மத்திய பிராந்தியத்தில் 15 யானைகளும், திருகோணமலையில் 14 யானைகளும் உயிரிழந்துள்ளன.

புத்தளத்தில் 9 யானைகளும், கிளிநொச்சியில் ஒரு யானையும் உயிரிழந்துள்ளன.

இலங்கையின் யானை வளத்தைப் பாதுகாப்பதில் வனஜீவராசிகள் அதிகாரிகள் தொடர்ந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, துப்பாக்கிச் சூடுகள், சட்டவிரோத மின்சார வேலிகள் மற்றும் வெடிபொருள் பொறிகள் ஆகியவை யானைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாகத் தொடர்கின்றமை இந்தப் புள்ளிவிபரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Bootstrap