மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வானூர்தி எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
குறித்த மோதலால் மாத்திரம் ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை வரிக்கு முந்தைய நிலையில் 35.6 பில்லியன் ரூபாய் இழப்பைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரையாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை செய்யப்படாத முகாமைத்துவக் கணக்குகளின்படி, குறித்த காலப்பகுதியில் அதன் மொத்த வருமானம் 82.8 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இது 2025/2026 நிதியாண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 62.6 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வானூர்திப் போக்குவரத்துத் தொடர்புகள் பாதிக்கப்பட்டதுடன், பிராந்தியத்தின் பல்வேறு இடங்களுக்கான சேவைகளையும் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
பின்னர் வான்வெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் தடங்கல்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் வழித்தட வலையமைப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வருமானத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கின.
எனினும், பிராந்தியத்தின் வானூர்திப் போக்குவரத்து தற்காலிகமாக இலங்கையின் ஊடாகத் திருப்பிவிடப்பட்டதால், நாட்டில் வானூர்தி நடவடிக்கைகள் மற்றும் பயணிகளின் வருகை ஓரளவு அதிகரித்திருந்தது. இதன் மூலம் குறித்த நெருக்கடியின் பாதிப்புகள் ஓரளவு குறைக்கப்பட்டன.
வருமானம் அதிகரித்த போதிலும், செயற்பாட்டு பற்றாக்குறை, அதிகரித்த எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள், அந்நியச் செலாவணி இழப்புகள் மற்றும் நிதிச் செலவுகள் காரணமாக நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எனினும், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் மூலம் 3.4 பில்லியன் ரூபாய் நிகர வருமானம் கிடைத்தமையால், குழுமத்தின் மொத்த நிகர நட்டம் 32.2 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது.
2026 ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 209.9 பில்லியன் ரூபாயாகவும், மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாகவும் காணப்பட்டுள்ளன.
இதனால், குறித்த காலப்பகுதியில் நிறுவனத்தின் மூலதனம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் பெற்றுக்கொண்ட கடன்களின் முதல் மற்றும் இரண்டாவது தவணைகளைச் செலுத்துவதற்காக அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.
அத்துடன், நிறுவனத்தின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 175 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரசாங்க உத்தரவாதப் பிணைமுறிகள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட 126.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணைமுறிகள் 2026 மார்ச் 20 முதல் அரசாங்கத்தின் கடன் தொகையில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், நிறுவனத்தை விரிவாக மீளாய்வு செய்வதற்கான மூலோபாய மற்றும் மறுசீரமைப்புக் குழுவொன்றை அமைக்க 2026 ஜூன் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா, மேற்கு ஆசிய நெருக்கடியால் வானூர்தி எரிபொருளின் கிடைப்பனவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கும்போது, சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
இதனால் வானூர்தி எரிபொருள் உற்பத்தியில் குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது. வானூர்தி எரிபொருளின் கிடைப்பனவு குறையும்போது, அதன் விலை மேலும் அதிகரிக்கிறது.
இது ஒட்டுமொத்த வானூர்திப் போக்குவரத்துத் துறையையும் பாதிக்கிறது. மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பால் மாத்திரம் இந்தப் பாதிப்பு ஏற்படுவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நெருக்கடியால் மாத்திரம் ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதற்காகத் தமது அலுவலகம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.