யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். சில தருணங்களில் மனிதர்களை விட புத்திசாலித்தமானவையும் கூட. பிள்ளையார் வழிபாடு என்பது யானைகளின் சமூக, கலாசார விழுமியங்களின் ஒரு அடையாளம் எனலாம். யானைகள் சிக்கலான, வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆசியாவில், குறிப்பாக இலங்கையில், இந்த அற்புதமான விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே மரியாதையைத் தூண்டுகின்றன. யானைகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறது. யானைகள் இலங்கையின் சின்னங்களாக, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. அவை வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பல்லுயிரியலை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யானைகள் வறண்ட காலங்களில், தண்ணீருக்காக தந்தங்களால் நிலத்தைத் தோண்டுகின்றன. இது வறண்ட, கடுமையான வாழ்விடங்களில் ஏனைய விலங்குகளும் நீர் ஆதாரத்தைப் பெற வழிசெய்கிகிறது. வன யானைகள் உணவு உட்கொள்ளும் போது தாவரங்களிடையே இடைவெளிகளை உருவாக்குகின்றன; அவற்றினிடையே புதிய தாவரங்கள் வளர அனுமதிக்கின்றன; சிறிய விலங்குகளுக்கான பாதைகளை உருவாக்குகின்றன; மரத்தின் முளைகள் மற்றும் புதர்களை உண்பதன் மூலம் நிலப்பரப்பை பராமரிக்க உதவுகின்றன; சமவெளிகளைத் திறந்த நிலையில் வைக்கின்றன. யானைகள் எங்கு சுற்றித் திரிகின்றனவோ அங்கெல்லாம், தாங்கள் உண்ணும் தாவரங்களின் விதைகளால் நிரப்பப்பட்ட சாணத்தை விட்டுச் செல்கின்றன. இந்தச் சாணம், விதைகள் முளைக்க, புதிய புற்கள், புதர்கள் மற்றும் மரங்கள் வளர வழிவகுக்கும். இது சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பேணுகிறது. ஆனால், யானைகள் தினமும் கொல்லப்படும் அவலம் தான் இலங்கையின் இன்றைய துயரமான நிலை. இந்நிலை தொடர்ந்தும் நீடிப்பது என்பது எமது தேசத்தின் வளமான முதுசங்களை நாமே குழி தோண்டிப் புதைப்பது போலாகும். குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடரும் யானைகள் மீதான மனித அழுத்தமானது மிக அதிகமாகும்.
வவுனியா, குடகச்சக்கொடியிலுள்ள நெற்செய்கைப் பகுதியில் போசாக்கின்மை காரணமாக பெண் யானையொன்று 4 டிசெம்பர் 2024 அன்று உயிரிழந்துள்ளது. நீண்ட தூரம் பயணித்தமையும், பசியும், யானையின் பலவீனமான வயது முதிர்ந்த நிலையும் இறப்பின் காரணங்கள் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வார கால மருத்துவச் சிகிச்சையின் பயனின்றி இம் மரணம் சம்பவித்துள்ளது. மரணத்திற்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய விசாரணனைகள் தொடரலாம் அல்லது இந் நிகழ்வு படிப்படியாக மறைந்தும் போகலாம். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. வன வளங்களின் அழிவானது சதா நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவ் விடயமாக நீடித்த மெத்தனப்போக்கு தொடர்ந்தபடியே உள்ளது.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மதிப்பிட்டுள்ள தகவலின்படி, 19ஆம் நூற்றாண்டில் இருந்து யானைகளின் சனத்தொகையில் ஏற்பட்ட மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தற்போது 5,800 யானைகள் இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், யானைகளின் எண்ணிக்கை சுமார் 65% குறைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதே நேரத்தில், சீரற்ற கண்காணிப்பு முறைகளைக் கருத்தில் கொண்டால், உண்மையான எண்ணிக்கை இதைவிடக் குறைவாக இருக்கலாம் என்று வனவிலங்கு நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250 யானைகள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால், பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, வருடத்திற்கு 400 இறப்புகளைத் தாண்டியுள்ளதாக தெரியவந்தது. இந்தத் தொடர்ச்சியான இழப்பு தடையின்றி நீண்டால், இன்னும் பத்து ஆண்டுகளில் இலங்கையின் யானைத் தொகையில் 70% அழிந்து போகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு காலத்தில் காட்டு யானைகள் இலங்கை முழுவதும் பரவலாக இருந்தன. அவை தற்போது உலர் வலய தாழ்நிலங்கள், வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வடமத்திய பிரதேசம், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒரு பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கராஜ காடு, வில்கமுவ, தம்புள்ளை, லக்கல, பல்லேகம போன்ற மத்திய மாகாணத்தின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய ஈர வலயத்தில் யானைகள் வாழ்கின்றன. இலங்கையின் பிரதான தேசிய பூங்காக்கள் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாக விளங்குகின்றன, அவற்றில் உடவளவே, யால, லுணுகம்வெஹெர, வில்பத்து மற்றும் மின்னேரியா முக்கியமானவையாகும். இந்தப் பகுதிகளைத் தவிர, மனித – யானைகள் மோதல் காரணமாக கைவிடப்பட்ட குட்டி யானைகளைப் பராமரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கையின் பின்னவல யானைகள் காப்பகத்திலும் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. யானைகள் பெரும்பாலும் மனிதக் குடியிருப்புகளை ஆக்கிரமித்து சொத்துகள், பயிர்கள் மற்றும் உயிர்களைச் சேதப்படுத்துகின்றன. இவ்வகையான யானைகள் பிடிக்கப்பட்டு வடமத்திய மாகாணத்தின் ஹொரவபொத்தானையில் உள்ள யானைகள் தங்குமிடத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இந்த ஹோல்டிங் மைதானம் யானைகளை இடமாற்றம் செய்வதற்கும், தகுந்த பராமரிப்பைப் பெறுவதற்கும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.
உடவளவை யானைகள் ஆராய்ச்சித் திட்டம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இலங்கையின் காட்டு வளத்தின் பேரிழப்பைக் காட்டுகிறது. 2010 இல் இருந்து 4,194 யானைகள் இறந்துள்ளதாகவும், 2023 இல் மட்டும் 470 இற்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாகவும் இப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
“இந்த இறப்புகளில் பெரும்பாலானவை மின்சாரம், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படுகின்றன. இந்த ஆண்டுக்குள் ஏற்கனவே 200 இற்கும் மேற்பட்ட யானைகள் இறந்துவிட்டன. சட்ட அமுலாக்கத்தில் உள்ள நெருக்கடிகள் மேலும் மேலும் மோசமான நிலைக்குச் செல்வதோடு, அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையானது, இலங்கையின் யானைகள் எதிர்கொள்ளும் கடுமையான அழுத்தங்களை எதிர்வு கூறுகின்றன. தேசிய பூங்காக்களில் இந்த விலங்குகளுக்குப் போதுமான உணவு இல்லை; வனப் பகுதிகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.”
இலங்கை, மனிதத் தாக்குதலினால் ஏற்படும் யானைகளின் இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்திலும்; யானைத் தாக்குதலால் ஏற்படும் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 இல் இலங்கையில் மனித – யானை மோதலைத் தணிப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை ஜனாதிபதியின் குழுவொன்று உருவாக்கியது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மனித – யானை மோதலுக்கு தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. யானை உயிரியலாளர் டாக்டர் பிரித்விராஜ் பெர்னாண்டோ தலைமையில் இக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் அறிக்கை 2020 டிசெம்பரில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால மோதலைத் தீர்க்கும் நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இன்றைய யானைகளின் மீதான ‘இனப்படுகொலை’யை நோக்கும் போது, இப் பரிந்துரைகள் முறையாக அமுலாக்கப்படவில்லை என்பது புலனாகிறது.
இலங்கை நாடு வன ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. இதனை அதன் அரசியலமைப்பு சட்டம் உறுதிசெய்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், 2020 இல் இலங்கையில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தேசிய செயல்திட்டம், மனித-யானை மோதலுக்கு மேலும் வழிவகுக்கும் திட்டமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் உடனடியாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியம். மின்சார வேலிகள் இந்த பிரச்சினையைத் தீவிரப்படுத்தும். இவை யானைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால், வன ஜீவன்களின், மனித வாழ்விடங்கள் மீதான அசைவைத் தடுக்க மனிதாபிமான பார்வையிலிருந்து ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இலங்கையின் சூழலியல் சமநிலை காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் உயிரியல் இழப்பு போன்ற காரணங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எதிரான பொறுப்பற்ற நடவடிக்கைகள், தற்போதைய சூழ்நிலையை மோசமாக்குவதோடு, நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கும் வழிவகுக்கும்.
மனித-யானை சகவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமநிலையான அணுகுமுறையை அரசாங்கம் வழிநடத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆதரவு தேவை தான். ஆனால், வனவிலங்குப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் கொண்டுவரப்படக்கூடாது. வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை நிபுணர்களின் உதவியுடன், மாகாண சபைகள் உட்பட, பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வளங்களையும் புதுமையான தீர்வுகளையும் நெறிப்படுத்த முடியும். யானைகளுக்கு தேவைப்படும் நீரும் உணவும், அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கும் போது, மனித-யானை மோதலின் தீவிரம் குறையும்.
யானைகள் 60-70 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழக்கூடியவை. அவை உணவு, தண்ணீர் தேடுவதற்கும், சமூக இனப்பெருக்கப் பங்காளிகளுடன் கலந்துகொள்ளவும் மிகப்பெரிய தூரங்களைத் தாண்டிச் செல்லும். இடப்பெயர்வின் அடிப்படையில், அவற்றின் அசைவியக்கம் பரப்பில் வேறுபடும். பொதுவாக, யானைகள் தினசரி 48 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. நீர்தேக்க இடங்களுக்கு அருகிலிருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. வறட்சியின் போது அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அவற்றின் உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகாதபோது, அல்லது உணவக எல்லைகள் தடுக்கப்படும் நிலைகளில், யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால் மோதல்கள் சம்பவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையே இன்றைய மனித-யானை மோதலின் அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது.
நிரந்தர நீர் ஆதாரங்களைச் சுற்றி மனிதக் குடியிருப்புப் பகுதிகள் குவிந்துள்ளன. ஏனெனில் இவை விவசாய விரிவாக்கத்திற்கு உதவுகின்றன. இந்த விரிவாக்கங்கள் யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வாழ்விடப் பரப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்துகின்றன. இதனால், யானை வாழ்விடங்களின் இணைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் வாழ்விடங்கள் சுருங்கத் தொடங்கியதால், யானைகள் படிப்படியாக மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் விளைவாக, இடம் மற்றும் வளங்களை அமைதியற்ற முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டி ஏற்படுவதனால், பயிர் தாக்குதல் முதல் பரஸ்பர உயிர் இழப்பு வரை, கடுமையான மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலைமையில், எல்லைப் பகுதிகளில் யானைகள் விவசாயிகளுக்கு இணக்கமற்ற விலங்குகளாக மாறியுள்ளன. விவசாயம் மையமாக உள்ள நிலப்பயன்பாட்டுப் பகுதிகளில், இந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஏனெனில் யானைகள் தங்கள் தாயக நிலங்கள் பறிபோவதை அனுமதிப்பதில்லை.
மனித-யானை மோதலின் விளைவாக, யானைகளால் அழிக்கப்படும் பயிர்ச்செய்கைகள் மனிதர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. யானைகள் பயிர்களை மட்டுமல்லாது, அருகிலுள்ள சொத்துகளையும் அழிக்கின்றன. சில சமயங்களில் மனிதருக்கு காயங்களை அல்லது மரணத்தை ஏற்படுத்தி, மனிதப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த மோதல்கள் பெரும்பாலும் யானைகளின் இயற்கை வாழ்விடங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடைபெறுகின்றன. யானைகள் வேட்டையாடப்படுவதைத் தினசரி எதிர்த்து போராடும் மக்களே அவற்றை விரும்பத்தகாத சுமையாகப் பார்க்கின்றனர். இதன் விளைவாக, உள்ளூர் சமூகங்கள் யானைகள் குறித்த எதிர்மறையான கருத்துகளைக் கொண்டுள்ளன.
இன்று, இலங்கை யானைகள் இலங்கை சட்டத்தின் கீழ் (அபராதம் மற்றும் சிறைத்தண்டனை) பாதுகாக்கப்படுகின்றன. அரசாங்கம், கிராம மக்கள் வாழும் பகுதிகளில், மனித-யானை இழப்புகளை தடுக்கவும் குறைக்கவும் பல்வேறு முகாமைத்துவ உத்திகளை நடைமுறையில் கொண்டுவந்துள்ளன. இருப்பினும், 2019 முதல் மனித-யானை மோதலால் ஆண்டுக்கு சராசரியாக 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 370 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மனித – யானை மோதலினால் ஏற்படும் யானைகளின் இழப்பு எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலுள்ளது; யானைகளால் ஏற்படும் மனித இறப்புகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தசாப்தங்களில், மனித இறப்பு விகிதம் சுமார் 42% அதிகரித்துள்ளது. மனித மரணம் மற்றும் அங்கவீனமடைதல் என்பவற்றோடு யானைகளால் சேதமடைந்த வீடுகள் அல்லது சொத்துகளுக்கு இழப்பீடுகளும் வழங்கப்படுகின்றன.
மனித-யானை மோதல்களை (HEC) குறைக்கும் மற்றும் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இன்னும் சிறப்பான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறைத் தேவைப்படுகிறது. இந்த மோதல்களை நிர்வகிக்க பொதுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக, யானைகளின் வாழ்விடத்துக்கும் பசுமை நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானது. இலங்கையில் தற்போதுள்ள தகவல்களின் குறைவால், முறையான திட்டமிடல் சவாலாக உள்ளது. இதில் மிக முக்கியமானது, காடுகளின் பரப்பளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் விளைவுகளைக் கணிக்க முடியாமல் இருப்பது. எனவே, மனித-யானை மோதல்களை குறைக்கும் நோக்கில், அபாய வலயங்களின் ஹாட்ஸ்பாட் வரைபடங்களை உருவாக்குதல் மிக அவசியமாகும். மனித-யானை மோதல் அபாய வலயங்களை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், மற்றும் மதிப்பீடு செய்யவும் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான கட்டமைப்பு தேவையாக உள்ளது. இதற்காக, இலங்கையில் செயற்கைக்கோள் தரவுகளை இணைத்துள்ள GIS (Geographic Information System) மாதிரிகளை பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறை மூலம், மனித-யானை மோதல் ‘ஹாட்ஸ்பாட்’ வரைபடங்களை உருவாக்கி, அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளைக் கண்காணிக்க முடியும்.
இலங்கையில் வன நிலங்களை பாதுகாப்பது, யானை-மனித மோதல் (HEC) ஆபத்தைக் குறைப்பது என்பன குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரை அடிப்படையிலான ஆய்வுகளை ஒப்பிடுகையில், செயற்கைக்கோள் படங்கள், வனப்பகுதி மற்றும் பசுமைப் பகுதிகளை கண்காணிக்கத்தக்க திறன் வாய்ந்த, செலவு குறைந்த ஒரு திறமையான அணுகுமுறையாக உள்ளது. குறிப்பாக, தொலைதூரம் அல்லது அணுக முடியாத பகுதிகளில் இது பயன்பாட்டிற்கு வரக்கூடியது. இலங்கையில் காடுகளின் பரப்பளவில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டறிவதற்காக இயல்பாக்கப்பட்ட வேற்றுமைத் தாவர சுட்டெண் (Normalized Difference Vegetation Index – NDVI) தரவின் பொருந்தக்கூடிய தன்மை முந்தைய இரண்டு முக்கிய ஆய்வுகளில் முன்வைக்கப்பட்டது. அந்த ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, தென்இலங்கையின் (உடவளவே தேசிய பூங்கா உட்பட) தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் பருவகால NDVI மதிப்புகளை, வன – நில மாற்றங்களை முன்கூட்டியே ஆராயும் ஒரு திறமையான கருவியாகக் கருதலாம்.
செயற்கைக்கோள் தரவு இணைவு (Satellite Data Fusion) மனித-யானை மோதலின் நீண்டகால கண்காணிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது காலப்போக்கில் மாறும் போக்குகள் மற்றும் நிலப்பரப்பு மாற்றங்களை திறம்பட கண்டறிய உதவுகிறது. சமீபத்திய தரவுகளை வரலாற்று செயற்கைக்கோள் படங்களுடன் இணைத்து பகுப்பாய்வு செய்வதன் மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். செயற்கைக்கோள் தரவு இணைவு, நிலப்பரப்பு வகைப்பாடு என்பன வரைபடமாக்கும் துல்லியத்தை மேம்படுத்துகின்றன. இதனால், உள்ளூர்மட்ட மற்றும் தேசிய அளவுகளில் சரியான தீர்மானங்களை எடுக்கும் வகையில் அதிக துல்லியமான தரவுகளை வழங்க முடியும்.
மக்கள்தொகையின் இயற்கையான வளர்ச்சியுடனும் மற்றும் இலங்கையின் இலவச சுகாதார அமைப்பின் முன்னேற்றத்துடனும், கிராமப்புற மக்கள்தொகை 1960 இல் 8.25 மில்லியனிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 17.8 மில்லியனாக கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில், தேசிய மற்றும் கிராமப்புற மக்கள்தொகை என்பன இடைவிடாது வளர்ச்சியடைந்துள்ளன. 1960 மற்றும் 2000 க்குள் இந்த வளர்ச்சி கிட்டத்தட்ட இருமடங்காக இருந்தது என்பது, மக்கள்தொகை பன்மடங்காக உயர்வதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
யானைகளின் உயிர் மற்றும் அவற்றின் தொடர்ச்சியை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் ஏற்பட்ட கடுமையான அச்சுறுத்தல்கள் பாதிக்கின்றன. மனித சமூகங்களின் வளர்ச்சி, நல்வாழ்வு, மற்றும் தாவரவகைகளுடன் இணைந்த வாழ்க்கைமுறைகள் இந்தப் பிரச்சினையை மோசமாக்குகின்றன. வாழ்விடங்கள் துண்டு துண்டாகப் பிரியும்போது, யானைகள் மற்றும் விவசாயத்திற்கிடையேயான தொடர்பு அதிகரிக்கிறது. இது, பிளவுபட்ட வாழ்விடங்களில் மோதல்களை மேலும் தீவிரமாக்குகிறது. வறட்சிக் காலங்களில், தண்ணீர் போன்ற அடிப்படை வளங்கள் யானைகளின் உயிர்காக்க முக்கியமாகும். தண்ணீர்ப் பற்றாக்குறையால், யானைகள் கிராமங்களில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளைத் தேடி வருகின்றன. இது குறைந்த அளவு நீர் விநியோகத்தைச் சரியாக அணுக வேண்டிய சிக்கல்களை உருவாக்குகிறது. சில பிராந்தியங்களில், யானைகளின் இயற்கை வாழ்விட வளங்கள், குறிப்பாக நீர் வளங்கள், தீவிரமாகச் சீரழிந்து காணப்படுகின்றன. கடுமையான வறட்சியால், யானைகள் புதிய வாழ்விடங்களைத் தேடிச் செல்லும் கட்டாயத்தில் சிக்குகின்றன. இதனால் மோதல்களின் அளவும் ஆபத்தும் அதிகரிக்கின்றன.
ஆசியா முழுவதும் மனிதர்களும் யானைகளும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வேகமாகக் குறைந்து வருகின்றன. இலங்கையின் கிராமப்புற சமூகங்களுக்கு விவசாயமே முதன்மையான வருமான ஆதாரமாகும். உணவு உற்பத்திக்கான நிரந்தர விவசாய நடவடிக்கைகளுக்காக அதிக நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற மக்கள்தொகையின் விரைவான வளர்ச்சி காரணமாக, உள்ளூர் சமூகங்கள் அதிகளவில் பாதுகாப்புப் பகுதிகள் அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு அருகில் குடியேற ஈர்க்கப்படுகின்றனர் (டி சில்வா, 1998). பாரம்பரிய விவசாய முறைகளின் உற்பத்தித் திறன் நவீன முறைகளைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், இவை வளப் பகிர்வின் மூலம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த மற்றும் இணக்கமான உறவை உருவாக்க வாய்ப்பு அளிக்கின்றன. ஒரு ஹெக்டேயருக்கு விளைச்சலை அதிகரிக்க புதிய விவசாய முறைகள் மற்றும் திறமையான பயிர்செய் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், மனிதர்கள் தேவையான விளைச்சலை பெறுவதுடன், யானைகளுக்கான வளங்களைப் பகிர்ந்தளிக்கவும் முடியும். இத்தகைய அணுகுமுறை, வளம் மற்றும் இடத்திற்கான போட்டியை குறைத்து, மனிதர்களும் யானைகளும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சகவாழ்வை உருவாக்க உதவும்.
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் உலர் வலயத்தில் ஏற்பட்ட மனிதக் குடியேற்றம், பெரிய நிலப்பரப்பு மாற்றங்களுக்கு வழிவகுத்தது. மனித நடவடிக்கைகள் விரிவடைந்து, யானைகள் வாழும் பகுதிகளைக் காவுகொண்டன. மனிதக் குடியேற்றங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பல உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. மக்கள் குடியேற்றம், நீர்மின்சார உற்பத்தி மற்றும் விவசாய நிலப் பாசனம் போன்ற முதன்மை நோக்கங்களைக் கொண்ட பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்கள், யானைகளை முதலில் பாதித்தன. இவை யானைகளின் தேசங்களை மற்றும் வாழ்விடங்களை அபகரித்து, அவற்றின் இயற்கை வாழ்வமைப்புகளை மாற்றிவிட்டன.
இலங்கையில், குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில், யானைகள் மீதான வாழ்வியல் அழுத்தங்கள், அவற்றின் அழிவுப் பாதைக்கு வழிவிட்டுள்ளதாகக் கூறலாம். போரின் போது தங்கள் இடங்களை விட்டு நகர்ந்த யானைகள், மீண்டும் தங்கள் இருப்பிடம் தேடி வந்தவண்ணமாக உள்ளன. மனிதர்களுக்கு தங்கள் தேசம் மீதான காதல் எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே விலங்குகளுக்கும் அவற்றின் தாய்நிலம் முக்கியமானது. ஆனால், யானைகள் மீதான பரிவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. காடுகள் மீதான நேசம் குறைந்து, மனிதர்கள் யானைகளுக்கு எதிரிகளாக மாறும்நிலை வந்துள்ளது. யானைகளுக்கு மின்சார வேலிகளுக்குப் பதிலாக, பழக்காடுகள் தான் தேவை. அவை நீர் பருகும் இடங்களின் பாதுகாப்பும் முக்கியமானது. வடக்கு – கிழக்குக் காடுகளில் யானைகளுக்கென பழக்காடு ஒன்றை உருவாக்குவது, நாம் யானைகளுக்குச் செய்யும் முக்கிய உதவி. அதுவே, சக வாழ்வின் ஒரு தொடக்கமாக அமையும்.