வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ பணியிடமான ஓவல் அலுவலகத்தில் இன்று பிற்பகல் அல்லது மாலை இந்த விசேட கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய-அமெரிக்க சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆரம்பித்துவைத்த வெள்ளை மாளிகையின் தீபாவளிக் கொண்டாட்டப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், வெள்ளை மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகக் கட்டடத்தில், இந்திய வம்சாவளி சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இக்கொண்டாட்டம் இடம்பெற்று வந்தது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பையும், இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.