அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிவடைந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
ஜனநாயகக் கட்சியின் பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரங்களின்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன், இத்தொழில்நுட்பத்திற்காகப் பெருமளவில் முதலீடு செய்யப்படும் நிதி எதிர்பார்த்த பலனைத் தருமா என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிகம் இடம்பெற்றுள்ள நாஸ்டாக் கூட்டுக் குறியீடு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 5.5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவடைந்துள்ளது.
டவ் ஜோன்ஸ் தரவுகளின்படி, இதனால் சந்தை மூலதன மதிப்பில் சுமார் 2.5 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனைய முக்கிய அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடுகளும் 2025ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான சரிவைப் பதிவு செய்துள்ளன.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கணினிச் சில்லுகள் மற்றும் ஏனைய உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை ஆசியாவின் தொழில்நுட்பப் பங்குச் சந்தைக் குறியீடுகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
ஐரோப்பியப் பங்குச் சந்தைகளிலும் இந்தச் சரிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில், கணினிச் சில்லுகளைத் தயாரிக்கும் இன்பினியோன் நிறுவனத்தின் பங்குகள் 8.5 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தொழில்நுட்ப உபகரணங்களைத் தயாரிக்கும் ஏ.எஸ்.எம்.எல். நிறுவனத்தின் பங்குகள் 6.5 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளன.