கனடாவில் பெண் ஓருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஓருவர் சிறையில் உயிரிழந்துள்ளார்.
மொன்றியாலில் வீடொன்றில் 'வீடியோ கொன்பரன்ஸ்' சந்திப்பில் ஈடுப்பட்டிருந்த வேளையில் படுகொலை செய்யப்பட்ட லீலா பென் சேலம் என்பவரின் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக விசாரணை எதுவும் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 வயதான யூசுப் மூசாவீ என்பவர் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி சிறையிலேயே உயிரிழந்துள்ளார் என மொன்றியல் மரண விசாரணை அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ரெனீ-லெவெஸ்க் பூலேவார்ட் பகுதியில் அமைந்துள்ள பென் சேலத்தின் குடியிருப்பில் அவர் கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கும் அதிகமான காலத்தின் பின்னரே, அதாவது அக்டோபர் 15 ஆம் திகதி மூசாவீ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிவதற்காக ஆண்ட்ரேஜீன் லூக் தலைமையிலான மரண விசாரணை அதிகாரியால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மரண விசாரணை அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
போர்டாக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூசாவீ, எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி மொன்றியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.