கென்யாவில் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கக் காரணமாக இருந்த மதத் தலைவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

கென்யாவில் 190 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கக் காரணமாக இருந்த மதத் தலைவர் போல் மெக்கன்சிக்கு (Paul Mackenzie) 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவீன காலத்தில் மத வழிபாட்டு அமைப்புடன் தொடர்புடைய மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில், சுமார் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உலகம் அழியப்போவதாகவும், அதற்கு முன்னதாகத் தங்களையும் தங்களது குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்து உயிரிழந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அவரது உத்தரவுகளைப் பின்பற்றுமாறு பாதிக்கப்பட்டவர்களை அவரது சகாக்கள் அச்சுறுத்தியும் தாக்கியும் வந்துள்ளனர்.

இதன் விளைவாகப் பட்டினியால் உடல் மெலிந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடல்கள் வனப்பகுதியில் உள்ள ஆழமற்ற குழிகளிலும் மலசலகூடக் குழிகளிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மெக்கன்சி மறுத்திருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களைப் பட்டினி கிடக்குமாறு தாம் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார். எனினும், அவரது வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 28 பேருக்கும் 10 முதல் 160 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக மெக்கன்சி உள்ளிட்ட குற்றவாளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லோரன்ஸ் ஒபோன்யோ தெரிவித்துள்ளார்.

Bootstrap