ஸ்கொட்லாந்தின் வருடாந்த பொன்ஃபயர் இரவு (Bonfire Night) கொண்டாட்டங்களின் போது பல பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையின் வாகனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவின் (Glasgow) புரோவன்மில் (Provanmill) பகுதியில் உள்ள கிரீன்சைட் வீதியில் (Greenside Street) காவல்துறையின் வாகனம் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டு அது முற்றிலும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளாஸ்கோவில் காயமடைந்த ஒருவர் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவரும், அவசர நோயாளர் காவு வண்டி ஊழியர் ஒருவரும் பட்டாசு வீசப்பட்டதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, எடின்பர்க் (Edinburgh) நகரின் பல பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை நோக்கியும் பட்டாசுகள் கொளுத்தி வீசப்பட்டுள்ளதுடன், அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்கச் சென்ற தீயணைப்புப் படை வீரர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் தீயணைப்பு வீரர்கள் எவரும் காயமடையவில்லை என்பதுடன், தீயணைப்பு வாகனங்களுக்கும் கடுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நவம்பர் 5 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலான காலப்பகுதியில் பட்டாசுகள் மற்றும் தீ மூட்டுதல் தொடர்பான 1,172 க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதாக ஸ்கொட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் சேவை தெரிவித்துள்ளது.
அவற்றில் 767 க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்குத் தீயணைப்புப் படையினர் நேரில் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரையிலான காலப்பகுதியில் பட்டாசுகள் தொடர்பாகக் காவல்துறையினருக்கு 1,024 புகார்களும் அழைப்புகளும் கிடைத்துள்ளன. இது 2025 ஆம் ஆண்டில் கிடைத்த 833 அழைப்புகளை விட அதிகமாகும்.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிறப்புப் பொது ஒழுங்கு காவல்துறைப் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டிய கடுமையான சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.