அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதேயான பிள்ளைகளின் மன நிலையில் பாரிய பாதிப்பையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்பதால் அனைத்துப் பிள்ளைகளுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கான புள்ளிகளை பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவது பொருத்தமானது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சை மீண்டும் நடாத்துவது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், பாடசாலைச் சூழலுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் இந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.