மொட்டுக் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைந்து செயற்பட மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த நிலையில், அது தொடர்பில் நாமல் ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவுப் போசண விருந்தொன்று நடைபெற்றிருந்தது.
இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மொட்டுக் கட்சியில் இருந்து விலகி,கடந்த காலங்களில் ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டிருந்த சுமார் 18 அரசியல்வாதிகளும் இந்தச் சந்தர்ப்பத்தில் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் தமது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைந்து செயற்பட முன்வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படும் சாத்தியம் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக அவர் மீது அனுதாபம் கொண்டிருந்த முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் மகிந்தவின் அழைப்பு குறித்து கரிசனையை வௌிப்படுத்தியுள்ளனர்.
எனினும் "எனது தகப்பனார் கட்சியின் சலூன் கதவுகளை எந்நேரமும் திறந்து வைத்திருந்தார். விரும்பியவர்கள் வெளியே போகலாம். விருப்பமானவர்கள் உள்ளே வரலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் நான் அப்படியல்ல. வெளியே போனவர்களை மீண்டும் உள்ளே எடுப்பதில் தீவிர கண்டிப்புடன் செயற்பட உள்ளேன்" என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அதனைக் கேட்டவுடன் மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்து கொள்ள உத்தேசித்த முன்னாள் அரசியல்வாதிகள், உடனடியாக தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.குறிப்பிடத்தக்கது.