முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாதென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த எல்லைக்கிராம மக்களின் அழைப்பை ஏற்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின் நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின் கீழான நீர்ப்பாசன விவசாய நிலங்களும் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த எமது தமிழ் மக்கள் மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கையை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், எமது மக்கள் மானாவாரி விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட தரப்பினரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர்.
இது தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. எமது மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாதெனவும் தீர்மானமும் எட்டப்பட்டது.
இவ்வாறிருக்க, தொடர்ந்தும் எமது மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது பொருத்தமான விடயமில்லை.
இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தினால் இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படும் திணைக்களங்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தொடர்ந்தும் எமது மக்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்த தடைகளை உடைத்து எமது மக்கள் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.