போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துவோரை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறையின்படி, போதைப்பொருளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவோரை சோதனையிடுவதற்கும், வழக்குத் தொடருவதற்கும் பொலிஸார் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானியும் 2025 செப்டம்பர் 4ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் கீழ், வாகனத்தை செலுத்தும் ஒருவரின் இயல்பற்ற நடத்தை, உடலசைவில் மாற்றங்கள், அசாதாரண கண் பார்வை நிலை அல்லது அவரின் ஆடை உட்பட்ட விடயங்களை மையப்படுத்தி, போதைப்பொருள் உட்கொண்டதாக "நியாயமான சந்தேகத்தின்" அடிப்படையில் ஒரு பொலிஸ் அதிகாரி அவரை சோதனையிட முடியும்.
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவரால் முதற்கட்ட உமிழ்நீர் பரிசோதனையையும் நடத்தலாம்.
இதேவேளை, புதிய விதிகளின்படி, மருத்துவ அதிகாரிகள் தங்கள் பரிசோதனையின் ஒரு பகுதியாக இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் அல்லது பிற உடல் திரவங்களின் மாதிரிகளை குறித்த சாரதிகளிடம் கோருவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.