கடந்த ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததை அடுத்து, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேலும் விரிவுபடுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கடற்படை முடக்க நடவடிக்கையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்க நேரப்படி ஜூலை 14 மாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக, மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20-க்கும் அதிகமான அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஈரானின் இராணுவ திறன்களை குறைக்கும் நோக்கில், அந்நாட்டின் தென்பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களின் பின்னர், ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள பண்டர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெடிப்பு சத்தங்கள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்பு, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்திலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படும் என கடுமையாக தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானைத் தவிர பிற நாடுகளின் அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் இந்த நீரிணை திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கப்பல்களிடம் 20 சதவீத வரி விதிக்கும் யோசனையை முன்வைத்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகின்றன.