பலூசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுாசிஸ்தான் தங்களை ஒரு தனி நாடாக தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுாசிஸ்தான் தங்களை  தனி நாடாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பலுாச் விடுதலை அமைப்பு இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், 'பலுாசிஸ்தான் குடியரசு' என்ற பெயரில், சமூக வலைதளத்தில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டு, பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பலுாச் விடுதலை அமைப்பினர், பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், தற்போது தனி நாடாக இயங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்கு என தனி தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் 'பலோச்சி பாலுஸ்' என்ற புதிய நாணயத்தையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு படையில் இருந்த பலோச் மற்றும் பஷ்துான் இன மக்கள் தங்கள் பதவிகளை துறந்து தங்களுடன் இணைந்துள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் பாகிஸ்தானை முற்றிலும் வெளியேற்ற ஐந்து லட்சம் வீரர்கள் தயாராக இருப்பதாகவும், அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா., சபை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலுாசிஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், புதுடில்லியில் துாதரகத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர பிரகடனம் என்பது பல ஆண்டு கால போராட்டத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், சட்டரீதியாக பலுாசிஸ்தான் இன்னும் ஒரு தனி நாடாக மாறவில்லை. புதிய நாடாக உருவாவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரமும், பிற நாடுகளின் ஆதரவும் அவசியம். தற்போது வரை எந்தவொரு உலக நாடும் பலுாசிஸ்தானை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அங்குள்ள மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஜே.ஏ.ஏ.சி., எனும் கூட்டு அவாமி நடவடிக்கை குழு, போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் ராவலாகோட்டிலிருந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபராபாத் நோக்கி பேரணியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளில், வன்முறை வெடித்தது. இதில், 10 பொதுமக்கள் மற்றும் இரண்டு பாதுகாப்பு படையினர் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap