நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
குறித்த இந்த நிலநடுக்கம் 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதுடன், புகழ்பெற்ற சுற்றுலா மையமான குவீன்ஸ்டவுன் நகருக்கு மேற்கே 83 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு தாக்கியது.
ஆரம்பக்கட்ட கணிப்புகளின்படி மில்ஃபோர்ட் சவுண்ட் (Milford Sound) போன்ற பகுதிகளில் கடல் நீர் புகக்கூடும் என்ற அச்சத்தினால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டது. எனினும், நிலநடுக்கத்தின் வீரியம் முதலில் கணிக்கப்பட்டதை விடக் குறைவாக இருந்ததை உறுதி செய்த தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை, சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.
தற்போதைய நிலையில் சுனாமி எச்சரிக்கை ஒரு சாதாரண ஆலோசனையாக (advisory) குறைக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றாலும், கடலில் ஏற்படக்கூடிய வலுவான மற்றும் வழக்கத்திற்கு மாறான அலை நீரோட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகளோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.