கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்ப அலை காரணமாக, சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சீனாவின் 'மீடியா' (Midea) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 'போர்ட்டா-ஸ்பிலிட்' (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் மிக அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய, பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் சுவர்களைத் துளையிடவோ அல்லது வெளிப்புறத்தில் பெரிய ஏசி இயந்திரங்களைப் பொருத்தவோ கடுமையான கட்டுமான சட்டங்கள் தடை விதிக்கின்றன.

'போர்ட்டா-ஸ்பிலிட்' (PortaSplit) கருவிகள் எந்தவொரு கட்டுமான மாற்றமும் இன்றி, ஜன்னல் வழியாக மிக எளிதாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த சீன தயாரிப்புகள் குறைந்த விலையில் (சுமார் 750 யூரோக்கள்) கிடைப்பதால் சந்தைகளில் இவை மிக வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. தற்போது நிலவும் இந்த அதீத தேவையால் சில்லறை விற்பனைக் கடைகளில் இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இணையவழி (Online) விற்பனைத் தளங்களிலும் இதன் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஐரோப்பா சந்திக்கும் இந்த வெப்ப அலையானது, அந்நாடுகள் இன்னும் சீன உற்பத்திப் பொருட்கள் மீதே அதிகம் தங்கியிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Bootstrap