முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று யார் உறுதிப்படுத்தியது. படுகொலைகள் தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்ச்சைக்குரிய வழக்குகளின் பிரதிவாதிகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் அச்சுறுத்தலான சூழல் தற்போது காணப்படுகிறது. திறைசேரியால் செலுத்தப்பட்ட2.5 மில்லியன் மோசடி விவகாரத்தில் அரச அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் பிரதிவாதியான கபில சந்திரசேனவும் இவ்வாறே உயிரிழந்தார். இந்த சம்பவம் மரணங்கள் தற்கொலை என்றே குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. சந்திரசேனவும் இவ்வாறே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று யார் அறிவித்தது. ஊடகங்கள் எவ்வாறு தற்கொலை என்று அறிக்கையிட முடியும்.
படுகொலைகள், தற்கொலையாக மாறும் கலாசாரம் தற்போது காணப்படுகிறது. அரசியல் கலாசாரம் முறையற்ற வகையில் உள்ளது என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்றார்.