இந்தியா: டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜந்தர் மந்தரில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ, அவரது அனுமதியின்றி அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எதுவும் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
கீதாஞ்சலி தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நானும், அவரது குடும்பத்தினரும், கடந்த 20 நாட்களாக அவரைக் கண்காணித்து வரும் மருத்துவர்களும் ஒப்புதல் அளிக்கும் வரை, அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எந்த மருந்தையோ அல்லது திரவத்தையோ வழங்க வேண்டாம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யின்(Cockroach Janata Party) சமூக ஊடகப் பக்கத்தில், அபிஜித் தீப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜூலை 20 அன்று திட்டமிடப்பட்டிருந்த 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.