கனடாவில் (Canada) பரவும் காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் சில நகரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். நச்சு புகை பரவலை தடுக்க தவறிய கனடா மீது கூடுதல் வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ள டிரம்ப், கனடா தனது காடுகளையும் அவற்றில் உள்ள புதர்ச் செடிகளையும் முறையாகப் பராமரிக்காததால், அமெரிக்காவுக்குள் அசுத்தமான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியத்திற்குத் தீங்கான காற்று தேவையற்ற முறையில் ஊடுருவுகிறது. இந்தக் காற்றின் தரம் ஆபத்தானதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறிய, நான் அந்நாட்டுப் பிரதமரைத் தொடர்பு கொள்ள உள்ளேன். உண்மையில் இதனால் ஏற்படும் இழப்பு கணக்கிட முடியாதது! இத்தகைய விளைவுதான் ஏற்படும் என்று தெரிந்திருந்தும், அடிப்படை வன மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளை உரிய முறையில் கனடா மேற்கொள்ளவில்லை.
சொல்லப்போனால் இது அந்நாடு வேண்டுமென்றே செய்த அலட்சியமாகும், மேலும் இது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வாக மாறி, அமெரிக்காவுக்குப் பல பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தக் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் செலவுத் தொகையை, கனடா தற்போது செலுத்தி வரும் வர்த்தக வரிகளுடன் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கிறேன் என்று டிரம்ப் கூறி இருக்கிறார்.