வியட்நாமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, முவோங் தான் (Muong Than) மலைக் கிராமத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மழையுடனான வானிலைக்கு மத்தியில் காணாமல் போன 4 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக முவோங் தான் கிராமத்தில் 13 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. மேலும்m சுமார் 100 வீடுகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 238 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் சாலைகள், மின் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வியட்நாமில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதி வழக்கமாக மழைக்காலமாகும். கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் அங்கு ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 489 பேர் உயிரிழந்தனர். தற்போது வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் மேலும் 250 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், கூடுதல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது