கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீப் புகை மூட்டம் காரணமாக 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் (MetLife Stadium) ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறவிருந்த சூழலில், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது இதற்கு முக்கிய காரணமாகும்.
காட்டுத்தீயில் இருந்து தெற்கு நோக்கி பரவும் புகையின் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என அமெரிக்கத் தூதர் எச்சரித்துள்ளார்.
ஒட்டாவாவுக்கான அமெரிக்கத் தூதரான பீட் ஹோக்ஸ்ட்ரா, 'மாசுபாடு மிக மோசமாக இருந்து, அது வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ, ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தால், போட்டியை நடத்த வேண்டாம் என்று முதலில் குரல் கொடுப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகத்தான் இருப்பார்.
பாதுகாப்பற்ற சூழலில் போட்டியை நடத்தி, வீரர்கள் அல்லது உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்தப்போவதில்லை' என கனேடிய ஊடகத்திற்கு நேர்காணலில் கூறினார்.
கனடாவின் ஒன்டாரியோ உள்ளிட்ட பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே இதற்கான தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.