கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 930 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கொங்கோவில் மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த தீவிர பரவலின் காரணமாக மொத்தமாக 2,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எபோலா பரவல் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த மே 15 ஆம் திகதின்று கிழக்குக் கொங்கோவில் கண்டறியப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிவேகமாக பரவிவருவதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு 'புண்டிபுக்யோ' என்ற அரிதான வகை வைரஸ் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகக் கொடிய இந்த வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை.
இதனால் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகத் ஆரம்ப்பித்துள்ளனர்.
நோய்த்தொற்றின் மையப்பகுதியான கிழக்கு கொங்கோவில் நிலவி வரும் தொடர் ஆயுத மோதல்கள், சுகாதார மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் போதிய நிதிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளின் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கொங்கோ, சூடான் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தவும், தங்கள் நாடுகளுக்குள் பரவாமல் தடுக்கவும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தற்போது தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.