மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கைதிகள் கூட்டிற்குள் வைத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், பிளேடால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்குகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்குப் அமைய, கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்துப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணைக்காக நேற்றைய தினம் (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை, எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றக் கட்டடத்திற்குள் உள்ள சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், பிற்பகல் 3:00 மணியளவில் அங்கிருந்த மலசலக்கூடத்திற்குள் சென்று பிளேடால் தனது கழுத்தையும் கையையும் வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.