பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி அமைதிப் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்கள் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சரின் இராஜிநாமாவை வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டில்லி பொலிஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கேற்ற பேரணி ராஜாஜி மார்க்கிலிருந்து லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் வரை நடைபெற்றது.

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் . அத்துடன் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அரசு தயங்குகின்றது' என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bootstrap