ஸ்ரீலங்கன் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுப் பொலிஸ் குழுவினர், அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிச் கணக்குகள் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிவதே இந்த வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவருக்குச் சொந்தமான வங்கிச் கணக்கில் இந்த இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது கணக்குகளை ஆய்வு செய்யவும், அவரிடம் வாக்குமூலம் பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனான ஷாமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் இவவழக்கின் முக்கிய சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் இவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் சர்வதேச திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளன. இவர்களைக் கண்டறியும் பணிகளில் இன்டர்போல் சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்படவுள்ளது.
2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்காக 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையின் போது, ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புரூணை மற்றும் சிங்கப்பூர் கணக்குகள் ஊடாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெறப்பட்டதாக இந்த நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.