2022ஆம் ஆண்டு 'அரகலய' மக்கள் போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர் ஒருவரை சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ,அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான , தேசபந்து தென்னகோன் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
2022 போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்பவர், தனக்கு நடந்த சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகிய இருவருமே அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பிய ஒருவரை தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும் கைது செய்து தடுத்து வைத்தமை அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல் என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.