நீட் (Neet) வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என வலியுறுத்திய அவர், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பிரதமர் மோடி, இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.